ரூ.90 கோடியில் 12-வது பட்டாலியன் பணிகள்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் ரூ.90 கோடியில் 12-வது பட்டாலியன் அமைக்கும் பணிகளை போலீஸ் டி.ஜி.பி. விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-08-26 17:25 GMT

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் ரூ.90 கோடியில் 12-வது பட்டாலியன் அமைக்கும் பணிகளை போலீஸ் டி.ஜி.பி. விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

12-வது பட்டாலியன் பணிகள்

தமிழகத்தில் மணிமுத்தாறு, சென்னை, கோவை, பழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளதை போன்று ராமநாதபுரத்தில் 12-வது பட்டாலியன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 12-வது பட்டாலியன் அமைய ராமநாதபுரத்தில் இடவசதி இல்லை என்பதால் மணிமுத்தாறில் உள்ள 9-வது பட்டாலியனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாலியன் அமைப்பிற்கு நிரந்தர கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் 79 ஏக்கர் பரப்பளவில் கட்டிட பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் அமைந்துவரும் இந்த பட்டாலியனில் காவலர் குடியிருப்பு, அலுவலகம், ஆயுத வைப்பறை, காவாத்து மைதானம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

ஆய்வு

இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் வந்த காவலர் வீட்டுவசதி வாரிய டி.ஜி.பி. விஸ்வநாதன் மேற்கண்ட பட்டாலியன் அமைக்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அவரை டி.ஐ.ஜி. மயில்வாகனன், ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, வீட்டுவசதி வாரிய போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்று உடன் சென்றனர். கட்டிட வரைபடத்தை வைத்து முறையாக கட்டிட பணிகள் நடைபெறுகிறதா, எந்தெந்த பகுதி பணிகள் எந்த அளவு நடைபெற்றுள்ளது. எந்த பணிகளில் தொய்வு உள்ளது என்பதை விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

ஏறத்தாழ 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதை ஆய்வு செய்த டி.ஜி.பி. விஸ்வநாதன் அனைத்து பணிகளையும் வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார். நிகழ்ச்சியின்போது டி.ஜி.பி. விஸ்வநாதன் பட்டாலியன் வளாக பகுதியில் மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் பட்டாலியன் இன்ஸ்பெக்டர் கோட்டூர்சாமி உள்பட போலீசார் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்