சின்னசேலத்துக்கு 1,293 டன் உரம் வந்தது
சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 1,293 டன் உரம் வந்தது.;
சின்னசேலம்,
தூத்துக்குடி ஸ்பிக் உர நிறுவனத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 664 மெட்ரிக் டன் யூரியா, 188 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 377 மெட்ரிக்டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 64 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் என மொத்தம் 1,293 மெட்ரிக் டன் உரம் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி மேற்பார்வையில் வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு வந்த உர மூட்டைகளை பார்வையிட்டார். பின்னர் லாரிகள் மூலம் அந்த உர மூட்டைகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், தனியார் உர நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்தார். இந்த உர மூட்டைகள் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்காக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், விவசாய பயன்பாட்டுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உர நிறுவனங்களில் தற்போது யூரியா 5,295 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 2,423 மெட்ரிக் டன், பொட்டாஸ் 1,987 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 9,690 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை கொண்டு பதிவு செய்து மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு உரங்களை மட்டும் பெற்று பயனடைய வேண்டும் என்றனர்.