பொன்னமராவதி, திருவரங்குளம் அருகே ஜல்லிக்கட்டில் 1,214 காளைகள் சீறிப்பாய்ந்தன

பொன்னமராவதி, திருவரங்குளம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 1,214 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டி 31 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-06 19:21 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தேனிமலையில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகளும், 225 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

முதலில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, மிக்சி, குக்கர், கிரைண்டர், வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 11 பேர் காயமடைந்தனர். இதில் லேசான காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போட்டிப்போட்டு அடக்கினர்

திருவரங்குளம் அருகே உள்ள மாங்கனாம்பட்டி வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், திருவரங்குளம், காயாம்பட்டி, மாங்கனாம்பட்டி, வடவாளம், ஆலங்குடி, கறம்பக்குடி, விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 564 காளைகளும், 212 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

முதலில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. முன்னதாக வீரமாகாளியம்மன் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனை யாரும் பிடிக்கவில்லை. பின்னர் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

31 பேர் காயம்

இதையடுத்து, காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், குக்கர், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். இதில், படுகாயம் அடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை கணேஷ் நகர் போலீசார் செய்திருந்தனர்.

பொன்னமராவதி, திருவரங்குளம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 1,214 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டி 31 பேர் காயம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்