போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 120 வாகனங்களுக்கு அபராதம்

வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 120 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Update: 2022-10-07 18:45 GMT

வேலூர்

வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 120 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக ஆற்காடு சாலை திகழ்கிறது. இந்த சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு சில மாதங்கள் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து, அவ்வப்போது மருத்துவமனைக்கு சிகிச்சைகாக வருவது வழக்கம். மருத்துவமனைக்கு தினமும் வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் உள்ளூர்மக்களால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த சாலையில் உள்ள கடைக்கு வருபவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை போக்குவரத்து இடையூறாக நிறுத்துவதாகவும், அதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சில கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்து சமையல் அடுப்புகள், விளம்பர பதாகைகள் வைத்துள்ளன என்று போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தன.

120 வாகனங்களுக்கு அபராதம்

அதன்பேரில் வேலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று காலை தனியார் மருத்துவமனை அருகே ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மற்றும் போக்குவரத்து விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் ஏராளமான இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்தன. அவை அனைத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டன.

மேலும் சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக கடையின் பொருட்கள் மற்றும் விளம்பர பதாகைகளை வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அந்த பகுதி சிறிதுநேரம் பரபரப்புடன் காணப்பட்டது. வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட சுமார் 120 இருசக்கர வாகனங்களுக்கு ரூ.100, ரூ.200 வீதம் ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்