12 மணி நேரம் வேலை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்: திமுகவின் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு
அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. இந்த திருத்த சட்டத்தை கண்டித்து திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதனைதொடர்ந்து சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை வரவேண்டும் என்பதற்காக சட்டம் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்ததற்காக இதை கொண்டு வரவில்லை, குறிப்பிட்ட சில தொழிலுக்கு மட்டுமே இது பொருந்தும்.
தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் அமல்படுத்தப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. எந்ததொழிலார்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும் என்றார்.
வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5 வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்படும் என பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
8 மணி நேர வேலை என்பது தொழிலாளர்களின் பிறப்புரிமை, அதில் கை வைக்கமாட்டோம். தொழிலாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமேயானால் முதல் குரல் முதல்-அமைச்சர் கொடுப்பார், எங்களை நம்பி ஆதரவளியுங்கள் என பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் உறுதி அளித்தார்.
8 மணி நேர வேலை தொடர்பான தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர, திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.