4 சட்டமன்ற தொகுதிகளில் 11,58,578 வாக்காளர்கள், 1,371 வாக்குச்சாவடிகள் ராமநாதபுரம் கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 11,58,578 வாக்காளர்கள் உள்ளனர். 1,371 வாக்குச்சாவடிகள் உள்ளன என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

Update: 2023-08-31 19:00 GMT


ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 11,58,578 வாக்காளர்கள் உள்ளனர். 1,371 வாக்குச்சாவடிகள் உள்ளன என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி வாக்குச்சாவடி சீரமைப்புக்கான ஆலோசனை கூட்டம் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் சீரமைத்தல் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்த ஆலோசனை, கோரிக்கைகள் குறித்து கூட்டம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி) என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் 5,75,546 ஆண் வாக்காளர்களும், 5,81,268 பெண் வாக்காளர்களும், 68 மற்றவர்களும், 1696 ராணுவத்தில் பணிபுரிபவர்கள் என மொத்தம் 11,58,578 வாக்காளர்கள் உள்ளனர். கிராம பகுதிகளில் 293 வாக்குச்சாவடி மையங்களும், நகர் பகுதியில் 1078 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 1371 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன.

பெயர் மாற்றம்

தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகம்-83 மற்றும் 305-லும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பாகம்-307 ஆகிய வாக்குச்சாவடி மையங்களிலிருந்து தலா 1 வாக்குச்சாவடி மையம் விதம் கூடுதலாக 3 வாக்குச்சாவடி மையங்கள் அமைத்திட தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

பொதுவாக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி 1500-க்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அங்கு 2 வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பது என்பது ஆணை. அதன் அடிப்படையில் தற்போது 3 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 17 வாக்குச்சாவடி மையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கைகள் வரப்பெற்றது. 3 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் பெயர் மாற்றம் குறித்து மனு அளித்துள்ளார்கள்.

வாக்காளர் பட்டியல்

வாக்குச்சாவடி மையங்களின் நிலை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுடன் களஆய்வு செய்து ஒரு வார காலத்திற்குள் தேவையான கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கிட வேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

4 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதற்காக அனைத்து கட்சி பிரமுகர்களுக்கு கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, தேர்தல் தாசில்தார் செல்லப்பா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்