111 ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 111 ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர், ஊராட்சி மன்றங்களில் காலியாக உள்ள செயலாளர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணைத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். மன உளைச்சலை ஏற்படுத்தும் அதிக பணிச்சுமையை குறைக்க வேண்டும். கருவூலம் மூலம் நேரிடையாக சம்பளம் வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் 3 நாட்கள் சம்பளம் பெறாமல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 10 ஊராட்சிகளில் செயலாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. 2-வது நாளாக நேற்று ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமையில் மொத்தம் 111 ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.