ரூ.11 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலித்த வழக்கில் ரூ.11 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவர் அம்பையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.160 செலுத்தி குவாட்டர் மதுபாட்டில் கேட்டுள்ளார். அதற்கு டாஸ்மாக் கடை விற்பனை மேற்பாவையாளர், 190 ரூபாய் தருமாறு கூறியுள்ளார். பின்னர் ரூ.190-க்கு ரசீது கேட்டதற்கு ரூ.180-க்கு ரசீது கொடுத்துவிட்டு, கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்யப்படும், என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து டாஸ்மாக் மேலாளரிடம், வேல்முருகன் புகார் செய்தார். அவரும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் விசாரணை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த வேல்முருகன், வக்கீல் பிரம்மா மூலம், நெல்லை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிளாட்சன் பிளஸ்சட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் வேல்முருகனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவு ரூ.1000-மும் சேர்த்து மொத்தம் ரூ.11 ஆயிரம் வழங்க விற்பனை மேலாளருக்கு உத்தரவிட்டனர்.