தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி

கோவையில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி நடைபெற்றது.

Update: 2023-09-27 20:45 GMT

கோவை

கோவையில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி நடைபெற்றது.

தனியார் நிறுவன மேலாளர்

கோவை ரெட்பீல்டு பகுதியை சேர்ந்தவர் சாய் ஹரி கிருஷ்ணா(வயது 30). தனியார் நிறுவன மேலாளர். இவருடைய செல்போனிற்கு டெலிகிராம் செயலியில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. உடனே அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து தனது விவரங்களை அவர் பதிவு செய்தார்.

அதன்பின்னர் அவரை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் தரப்படும் பணிகளை செய்து முடித்தால், அதற்கு ஏற்றாற்போல் கமிஷன் தொகை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார். மேலும் முதற்கட்டமாக தாங்கள் அனுப்பும் யூடியூப் வீடியோக்கள், நிறுவனங்களின் இணையதளத்தை லைக் செய்து ரிவியூ செய்தால் பணம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

பங்கு வர்த்தகம்

இதனை தொடர்ந்து சாய் ஹரி கிருஷ்ணா தனக்கு அனுப்பப்பட்ட அந்த டாஸ்க்குகளை செய்து முடித்தார். இதற்கு அவருக்கு கமிஷனாக ரூ.150 கிடைத்தது. இதையடுத்து மீண்டும் அவரை தொடர்பு கொண்ட அந்த பெண் இனி சந்தா செலுத்தி ஒரு இணையதளத்தில் கணக்கு தொடங்கும்படி அறிவுறுத்தினார். இதன்படி அவரும் அந்த இணையதளத்தில் தனக்கான கணக்கை தொடங்கினார். பின்னர் அவருக்கு பங்கு வரத்த்கத்தில் ஈடுபடுவது குறித்து எடுத்து கூறப்பட்டது.

இதன்பின்னர் அவரிடம் இனி பணம் செலுத்தி தாங்கள் தரும் பணிகளை செய்து முடித்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என்று அந்த பெண் ஆசைவார்த்தை கூறினார்.

போலீசில் புகார்

இதனை நம்பிய அவர் ஆரம்பத்தில் ரூ.1,000 செலுத்தி பணியை செய்து முடித்தார். இதற்கு கமிஷனாக ரூ.1,450 கிடைத்தது. இதனால் நம்பிக்கை அடைந்த அவர் அடுத்தடுத்து பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்து 6 ஆயிரத்து 640 செலுத்தினார்.

ஆனால் அவருக்கு கமிஷன் தொகை எதுவும் கிடைக்கவில்லை. ஆன்லைன் மூலம் செலுத்திய பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்