11 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது
சிவகிரி அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூரில் உள்ள ஒரு கல்லூரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வாசுதேவநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாமித்துரை தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியைச் சேர்ந்த சந்திரன் (வயது 60), வாசுதேவநல்லூர் முகம்மது இப்ராகிம் மகன் முகம்மது யூசுப் (37), செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சண்முகையா மகன் அருணாசலம் (35), அதே பகுதியை சேர்ந்த குமரேசன் மகன் பாலு (23) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, 11 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.