108 பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

இந்து அறநிலையத்துறை சார்பில் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Update: 2023-01-20 00:13 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு நடந்த இந்து அறநிலையத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை கோவில்களின் தலவரலாறு, தலபுராணங்கள், கோவில் தொடர்பான ஆகமங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி தமிழில் புத்தகமாக வெளியிடுதல், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், பழமையான அரிய நூல்கள், கோவில் கட்டிடக்கலை, செந்தமிழ் இலக்கியங்களை மறுபதிப்பு செய்வதுடன், புதிய சமய நூல்கள் மற்றும் கோவில்களில் கண்டறியப்படும் பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி நூலாக்கம் செய்திடவும், அந்த நூல்களை கோவில்கள் மற்றும் மடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பதிப்பகப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. இதன்மூலம் முதற்கட்டமாக, தமிழ் மொழி வல்லுனர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டிடக் கலை வரலாறு, அவ்வையார் வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

இந்த புத்தக வெளியீட்டு விழா நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் வரவேற்றார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

பின்னர், இந்துஅறநிலையத்துறையில் பணியாற்றி இறந்து போனவர்களின் வாரிசுதாரர்கள் 10 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

புத்தக விற்பனை நிலையம்

பல்வேறு கோவில்களில் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகளையும், அவற்றை பராமரித்து பாதுகாக்கும் பணிகளையும், ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பதிப்பக பிரிவு, ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிட பணி ஆகியவற்றையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தையும் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆழ்வார்திருநகரி ரெங்கராமானுஜ ஜீயர், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், இந்து அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்