திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,065 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,065 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,065 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் கோவில் மற்றும் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் கடந்த மாதமே சிலைகள் செய்வதற்கு ஆர்டர் கொடுத்து இருந்தனர்.
அதன்படி திண்டுக்கல் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் தயாரான விநாயகர் சிலைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பே வாங்கி வந்து வைத்தனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் அனுமதி பெற்ற இடங்களில் சிலை வைப்பதற்காக பந்தல், மேடை போன்றவை அமைக்கப்பட்டன. மேலும் இன்று அதிகாலை முதலே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.
1,065 சிலைகள்
பின்னர் விநாயகர் சிலைகளுக்கு கண் திறப்பு நடத்தப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதில் குறைந்தபட்சம் 3 அடி உயரம் முதல் அதிகபட்சமாக 12 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. அவ்வாறு பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர்.
இதில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் சார்பில் 217 சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பா.ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து மகாசபா, அகில பாரத இந்து மகாசபா, இந்து தர்ம சக்தி, இந்து சக்தி சங்கமம், வி.எச்.பி. அர்ஜூன் சேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 848 சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
வேடசந்தூரில் ஒரே இடத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் மணிகண்டன் தலைமையில் ஒரு சிலையும், இந்து மகாசபா நிர்வாகி ரங்கசாமி தலைமையில் மற்றொரு விநாயகர் சிலையும் வைக்கப்பட்டது. மேலும் அதே இடத்தில் இந்து முன்னணி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றொரு சிலை வைக்க வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் ரோந்து
இதன்மூலம் மாவட்டம் முழுவதும் 1,065 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 1,850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.