திண்டுக்கல்-பழனி இடையே 100 கி.மீ. வேகத்தில் மின்சார ரெயில் இயக்கி சோதனை
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல்-பழனி இடையே மின்மயமாக்கல் பணிகள் முடிந்ததை தொடர்ந்து, நேற்று தென்னக ரெயில்வே முதன்மை தலைமை மின்சார என்ஜினீயர் ஆய்வு மேற்கொண்டு 100 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்தார்.
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல்-பழனி இடையே மின்மயமாக்கல் பணிகள் முடிந்ததை தொடர்ந்து, நேற்று தென்னக ரெயில்வே முதன்மை தலைமை மின்சார என்ஜினீயர் ஆய்வு மேற்கொண்டு 100 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்தார்.
மின்மயமாக்கல்
மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல்-பழனி இடையேயான 58 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து, இந்த மின்மயமாக்கல் பணிகளை தென்னக ரெயில்வேயின் முதன்மை தலைமை என்ஜினீயர் சித்தார்த்தா நேற்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, தென்னக ரெயில்வே தலைமை மின்மயமாக்கல் என்ஜினீயர் சமீர் டிஹே, முதன்மை சிக்னல் மற்றும் தொலைதொடர்பு என்ஜினீயர் சுனில், முதன்மை மின் பகிர்மான என்ஜினீயர் சுரேந்திரன், மதுரை கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வு முடிந்த பின்னர், இந்த ரெயில் பாதையில் மின்சார ரெயில்கள் இயக்குவதற்காக 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டது.
100 கி.மீ. வேகத்தில்
பின்பு ஆய்வு பெட்டிகளுடன் கூடிய சிறப்பு ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு ஆய்வு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் 100 கி.மீ. வேகத்தில் பயணித்து மாலை 3.15 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தடைந்தது. மேலும், திண்டுக்கல்-பழனி இடையே உள்ள ரெயில் பாதையில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சப்படுவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ரெயில் நிலைய, தண்டவாள பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.