100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து கூட்டத்தில் பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:-
ராமராஜன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான சின்ன முட்லு நீர் தேக்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும். இந்த திட்டத்தை கொண்டு வர விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகளை ஒருங்கிணைத்து மாநில அரசு அதிகாரிகளை சந்திக்க அழைத்து செல்லவுள்ளோம், என்றார். தங்கராஜ் பேசுகையில், மாவட்டத்தில் சின்ன வெங்காயத்துக்கு கொட்டகை கேட்டு முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும், என்றார்.
சாலை வசதி
விசுவநாதன் பேசுகையில், கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தின் அப்பால் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு சென்று வர சாலை அமைக்காவிட்டால், ஜூலை 10-ந்தேதி விவசாயிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அன்னமங்கலத்தில் நெய்குப்பை வரை வேத நதியை அகலமாக தூர்வார வேண்டும், என்றார். அதற்கு கலெக்டர் கற்பகம் பதில் அளித்து பேசுகையில், கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தில் அப்பால் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு சென்று வர ரூ.14 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 13 பாலங்களுடன் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட அவசியம் இருக்காது, என்றார். செல்லதுரை பேசுகையில், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும். எடை மோசடி, இடைத்தரகர்களை தவிர்க்க விளை பொருட்களை வேளாண் விற்பனை கூடம் மூலம் நடமாடும் வாகனங்களை கொண்டு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், என்றார்.
விவசாயத்திற்கு தொழிலாளர்கள்
மேலும் விவசாயிகள் பேசுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (100 நாள் வேலை) தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டத்தை போக்கினாலும், அந்த திட்டத்தினால் விவசாயத்துக்கு கூலி தொழிலாளர்கள் போதிய அளவு கிடைக்காமல் விவசாயம் அழிந்து வருகிறது. 100 நாள் வேலை தொழிலாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும். விவசாய பணிகள் அதிகம் இருக்கும் போது, 100 நாள் வேலையை குறைவாக கொடுத்தால் தான் விவசாயத்துக்கு தொழிலாளர்கள் கிடைப்பார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும், என்றனர்.