100 நாள் திட்ட தொழிலாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்

வேலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாயத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-06-23 17:32 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, நேர்முக உதவியாளர் வெங்கடேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள், புகார்கள் குறித்து தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

வேலூர் மாவட்டத்தில் மழைக்காலம் வந்துவிட்டது. தற்போது எந்தெந்த பயிர்கள் பயிரிட்டால் உகந்தது என்பது குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். பேரணாம்பட்டு ஏரியில் கழிவுநீர் கலக்கிறது. நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், தொழிற்சாலை கழிவுநீர் என்கின்றனர். தொழிற்சாலை தரப்பில் கேட்டால் நகராட்சியின் கழிவுநீர் என்கின்றனர். எந்த கழிவுநீராக இருந்தாலும் ஆற்றில் கலக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வனத்துறை தீர்வு காண வேண்டும். விவசாயி மோகன்பாபு கைது விவகாரத்தில் அந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும். குடியாத்தத்தில் கால்நடை சந்தை அமைக்க வேண்டும். மாடு வைத்துள்ள உண்மையான ஏழை விவசாயிகளுக்கு கொட்டகை அமைத்து கொடுக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் மாங்காய் விவசாயிகள் ஏராளமானவர்கள் உள்ளனர். வேறு மாவட்டங்களில் உள்ள ஜூஸ் தொழிற்சாலைக்கு மாங்காயை கொண்டு செல்ல வேண்டி உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு என்று ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டம்

லத்தேரி கம்பத்தம் பகுதியில் உள்ள குட்டையில் பனைமரங்களை அகற்றி உள்ளனர். பனைமரங்களை காக்க வேண்டும். தக்காளி பயிரிடும் விவசாயிகளுக்கு தக்காளி நாற்றுகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு முருங்கைகீரை விதை தயாரிப்பது குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும். 100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை விவசாய வேலைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

களைக்கொல்லி மருந்து விலை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும். டிரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டும். வேலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மாங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. போதிய தரம் இல்லை என்று ஜூஸ் தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். ஜூஸ் பாட்டில்களில் உள்ள பழச்சாறில் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இயற்கை முறையில் தயாரிக்க பரிந்துரைக்க வேண்டும்.

மணிலா பயிரிடுவதால் காட்டுப்பன்றிகள் மற்றும் மயில், குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகள் நோயினால் பாதிக்கப்பட்டால் வெகுதூரம் ஏழை விவசாயிகளால் அவற்றை கொண்டு செல்லமுடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பனை மரங்களை வெட்டக்கூடாது

பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசியதாவது:-

பேரணாம்பட்டு ஏரியில் நகராட்சி கழிவுநீரோ, தொழிற்சாலை கழிவுநீரோ எதுவும் கலக்கக்கூடாது. இதுசம்மந்தமாக அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பனைமரங்கள் வளர்வதற்கு பல ஆண்டுகள் ஆகிறது. பனைமரங்களை வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்ட வேண்டிய நிலை இருந்தால் அனுமதி பெற்று அகற்ற வேண்டும். மரங்களை வளர வைப்பது பெரிய காரியம். முருங்கை மாத்திரை தொடர்பாக விவசாயிகளின் சந்தேகத்தை வேளாண் அதிகாரிகள் தீர்த்து வைக்க வேண்டும். தற்போது மழை பெய்வதால் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. எனவே அந்த தொழிலாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உரம் விற்பனை நிலையங்களை அதிகாரிகள் குழுவினர் திடீரென ஆய்வு செய்ய வேண்டும். அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வது தெரியவந்தால் அபராதம், உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

டிரோன் மூலம்...

டிரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் நடைமுறைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு இருந்தால் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் பணியை துரிதப்படுத்த வேண்டும். விவசாயி கைது விவகாரத்தில், அவர் மீது தவறில்லை என்று நானே கைப்பட கடிதம் எழுதி உள்ளேன். இதுதொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்