மாமல்லபுரம் வருகையையொட்டி ஜி20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு புராதன சின்னங்கள் குறித்து விளக்க 10 சுற்றுலா வழிகாட்டிகள் தேர்வு

மாமல்லபுரத்திற்கு வருகை தரும் ஜி20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு புராதன சின்னங்களை சுற்றி காட்ட 10 சுற்றுலா வழிகாட்டிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசி வரலாற்று தகவல்களை எப்படி கூறவேண்டும் என்று சுற்றுலாத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2023-01-31 11:50 GMT

வெளிநாட்டு விருந்தினர்கள்

சென்னையில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு விருந்தினர்கள் 150 பேர் பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டுகளிக்க வருகை தர உள்ளனர். இவர்களுக்கு மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பற்றி முழுமையாக சுற்றி காட்டி மகிழ்ச்சிப்படுத்த மாமல்லபுரத்தை சேர்ந்த அனுபவம் வாய்ந்த, அரசு அங்கீகாரம் பெற்ற எம்.கே.சீனிவாசன், வ.பாலன், மல்லை எம்.சிவா மற்றும் யுவராஜ், முருகன், பிரபாகரன், கன்னியப்பன், அருண்குமார், ஸ்டாலின், பூபாலன் ஆகிய 10 சுற்றுலா வழிகாட்டிகளை சுற்றுலாத்துறை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட இந்த 10 சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் மாமல்லபுரம் வரலாற்று தகவல்களை புள்ளி விவரங்களுடன் கூறி வெளிநாட்டு விருந்தினர்களுக்கு எப்படி சுற்றி காட்டுவது என்பது குறித்து சுற்றுலாத்துறை சார்பில் நேற்று மாமல்லபுரம் சுற்றுலா அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி

சுற்றுலா அலுவலர் த.சக்திவேல் தலைமையில், மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக்கல்லூரி முதல்வரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் ஜெ.ராஜேந்திரன் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பல்லவர் கால வரலாற்று தகவல்களை ஆங்கிலத்தில் பிழையில்லாமல் கூறி எப்படி சுற்றி காட்டுவது என்பது குறித்தும் 2 மணி நேரம் பயிற்சி அளித்தார்.

பிறகு சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஒவ்வொரு சிற்பங்களின் குறிப்புகள் அடங்கிய வரலாற்று தகவல்கள் குறித்த கையேடுகளும் வழங்கப்பட்டன.

மேலும் ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் முழுவதும் புராதன சின்னங்களிலும், பொது இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரம் விடுதிகளில் தங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளவர்களின் விவரங்களையும் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் வழங்க வேண்டும் என்று மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் விடுதி, ஓட்டல் நிர்வாகிகளை அழைத்து அறிவுறுத்தினார்.

24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா

அப்போது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் அளிக்காத சந்தேகத்திற்குள்ளான நபர்களுக்கு அறைகள் வழங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். அனைத்து விடுதிகளிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், மாமல்லபுரம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாமல்லபுரம் பாண்டியன், மாமல்லபுரம் விடுதிகள் சங்க நிர்வாகிகள் உமாபதி, பி.சண்முகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்