வெறிநாய்கள் கடித்து 10 பேர் படுகாயம்
தேவதானப்பட்டி அருகே வெறிநாய்கள் கடித்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டியில் தெருக்களில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் அட்டகாசத்தை தடுக்குமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2 நாட்களாக வெறி நாய்கள் தெருக்களில் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. அவை தெருக்களில் செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சுப்புராஜ் (வயது 70), சுப்பிரமணி (69), முனியசாமி (48) உள்பட 10 பேரை வெறிநாய்கள் விரட்டி விரட்டி கடித்தன. இதில் படுயாமடைந்த அவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.