விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2024-06-20 13:28 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. நேற்று காலையில் இருந்தே ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல இந்த எண்ணிக்கை அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

நேற்று இரவு நிலவரப்படி 18 பேர் பலியான நிலையில், இன்று காலையில் மேலும் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 35 ஆக அதிகரித்தது. இன்று பிற்பகல் மேலும் 5 பேர் சிகிச்சை பலனினிறி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு நிவாரண நிதியுதவித் தொகையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்