துருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு கொண்டுவர 10 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் உத்தரவு
உடல் நலக்குறைவால் துருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு கொண்டுவர 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
உடல் நலக்குறைவால் துருக்கி நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 07.09.2023 அன்று தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் தனது 2 வயது பெண் குழந்தையுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துக்கொண்டிருந்து போது நடுவானில் அவரது இரண்டு வயது பெண் குழந்தை சந்தியாவிற்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவசரமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது
அங்கு "இஸ்தான்புல் மெடிக்கானா மருத்துவமனை"-யில் குழந்தை சந்தியா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவசர மற்றும் தீவிர சிகிச்சையின் பொருட்டு அவர்களின் மொத்த கையிருப்பு பணமும் செலவழிந்த நிலையில் மேல் சிகிச்சை செய்திட தமிழ்நாடு கொண்டு வர மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்ட நிலையில் குழந்தை சந்தியாவிற்கு கடுமையான சுவாச பிரச்சனை இருப்பதால், மருத்துவ குழுவின் கண்காணிப்பில், சுவாச கருவிகளுடன் விமானத்தில் பயணம் மேற்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இஸ்தான்புல் நகரிலிருந்து மேற்காணும் மருத்துவ வசதிகளுடன் குழந்தை சந்தியாவை தமிழ்நாடு அழைத்து வர தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து முதல்-அமைச்சர், சந்தியாவினை மேல்சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்து வர ரூபாய் 10 இலட்சம் அளித்து உத்தரவிட்டுள்ளார். தற்போது அயலகத் தமிழர் நலத்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சென்னை அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.