பெண்ணுக்கு ஊனத்துடன் குழந்தை பிறந்ததால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

டாக்டர்களின் கவனக்குறைவான சிகிச்சையால் பெண்ணுக்கு ஊனத்துடன் குழந்தை பிறந்ததால், அந்த பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2022-11-18 19:00 GMT

சேலத்தை சேர்ந்த பெண்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, கிருஷ்ணாபுரம் நடுவீதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 31). ஸ்ரீராம் வெளிநாட்டில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். ராஜேஸ்வரி கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் கர்ப்பமாக இருந்தபோது பெரம்பலூரில் உள்ள நிரஞ்சன் நர்சிங் ஹோம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு மருத்துவமனை டாக்டர்கள் அனைத்து வகையான மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். ஸ்கேன் எடுத்தும் பார்த்துள்ளனர். ராஜேஸ்வரியிடம் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாகவும், நன்றாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் குழந்தை ஊனத்துடன் பிறந்தது

அதே ஆண்டு நவம்பர் மாதம் அந்த மருத்துவமனையில் ராஜேஸ்வரிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண் குழந்தை முழு ஊனத்துடன் (மாற்றுத்திறனாளி) பிறந்திருந்ததால் ராஜேஸ்வரி, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கருவுற்ற ஆரம்பம் முதல் ராஜேஸ்வரி அதே மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்தும் டாக்டர்களின் ஆலோசனையின்படி தகுந்த நேரத்தில் ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனையும் செய்துள்ளார். ஆனால் டாக்டர்கள் சரியாக ஸ்கேன் எடுக்காமலும், உரிய சிகிச்சை, பரிசோதனை செய்யாமலும், கவனக்குறைவால் குழந்தை ஊனத்துடன் பிறந்ததாக கூறி ராஜேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், துயரத்துக்கும், அந்த குழந்தையின் எதிர்காலத்துக்கும் இழப்பீடாக ரூ.15 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையுடன் மருத்துவமனை நிர்வாகம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இழப்பீடு

இந்த வழக்கை நுகர்வோர் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான ஜவகர் மற்றும் உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணை முடிந்தநிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஜவகர் தீர்ப்பு வழங்கினார். அதில் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் ராஜேஸ்வரிக்கு மருத்துவமனை டாக்டர்களின் கவனக்குறைவாக ஸ்கேன் பரிசோதனை செய்ததாலும், மேல் சிகிச்சை முறையாக செய்யாததாலும், மருத்துவ சேவை குறைபாடு, அஜாக்கிரதையினால் பெண் குழந்தை ஊனத்துடன் பிறந்துள்ளது. அதற்கு மருத்துவமனை தான் பொறுப்பு என்று கூறி, ரூ.10 லட்சத்தை இழப்பீடாக ராஜேஸ்வரி-ஸ்ரீராம் தம்பதிக்கு கொடுக்க வேண்டும். மேலும் இந்த தொகையை 45 நாட்களுக்கு வழங்காவிட்டால் 8 சதவீத வட்டியுடன் சேர்த்து மனு தாக்கல் செய்த தேதியில் இருந்து கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்