சிவகிரியில் கார் மோதி 1½ வயது குழந்தை சாவு

சிவகிரியில் கார் மோதி 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2023-08-02 21:16 GMT

சிவகிரி

சிவகிரியில் கார் மோதி 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

1½ வயது குழந்தை

சிவகிரி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 32). இருசக்கர மெக்கானிக். அவருடைய மனைவி மோகன பிரியா (29). இவர்களுடைய மகன் தமிழ் மாறன் (6), மகள் தமிழினி (1½).

பூபாலனின் தாய் விஜயாள் (60). இவர் சிவகிரி ஜீவா தெருவில் பனியன் தைக்கும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். விஜயாள் நேற்று காலை வேலைக்கு செல்லும் போது தமிழினியை அழைத்து சென்றுள்ளார்.

கார் மோதி சாவு

இந்த நிலையில் மதியம் விஜயாள் நிறுவனத்தில் உள்ளே வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது தமிழினி நிறுவனத்தின் வாசலுக்கு வந்து நின்றார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பின்னோக்கி எடுக்க முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக தமிழினி மீது கார் மோதியது.

இந்த விபத்தில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு தமிழினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தமிழினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய டிரைவர் சுப்பிரமணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் மோதி குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்