காரில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை 3 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
நாகர்கோவில்,
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை 3 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
துரத்திச் சென்ற அதிகாரிகள்
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறையினர், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதை தடுத்து பறிமுதல் செய்து வருகிறார்கள். எனினும் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமார் தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கர் மற்றும் ஊழியர் முருகதாஸ் ஆகியோர் நேற்று அதிகாலை ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே அதிகாரிகள் தங்களது வாகனம் மூலமாக விரட்டிச் சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று கோட்டார் பகுதியில் அதிகாரிகள் மடக்கினர். உடனே காரை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
ரேஷன் அரிசி பறிமுதல்
இதைத் தொடர்ந்து காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது. அதை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரேஷன் அரிசியோடு சேர்த்து காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆனால் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.