சென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 32 லட்சத்து 3 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 767 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-12-13 23:21 GMT

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாய் மற்றும் ரியாத்தில் இருந்து வந்த விமானங்களில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதனால் அவர்களது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சிகரெட் பாக்கெட்டுகள்

அதில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளும், லேப்டாப்களும் இருந்தன. சந்தேகத்தின் பேரில் சிகரெட் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.52 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 57 கிராம் தங்கம், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள், லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ரூ.1¼ கோடி தங்கம்

இதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பயணிகளை சந்தேகத்தின் பேரில் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த ரூ.79 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 710 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 32 லட்சத்து 3 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 767 கிராம் தங்கம், வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள், லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்