கட்டுமான பணிகள் நிறைவு:கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டயாலிசிஸ் பிரிவு விரைவில் தொடக்கம்:மருத்துவ அலுவலர் தகவல்

கட்டுமான பணிகள் நிறைவடைந்ததால் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டயாலிசிஸ் பிரிவு விரைவில் தொடங்க உள்ளதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

Update: 2023-09-03 18:45 GMT

கேரள மாநில எல்லைப்பகுதியில் கம்பம் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்பட்டு தற்போது 2 யூனிட் உடன் செயல்பட்டு வருகிறது. இந்த டயாலிசிஸ் பிரிவு தற்காலிகமாக மகப்பேறு பிரிவு அருகே செயல்பட்டு வந்தது. இந்நிலையில் டயாலிசிஸ் பிரிவிற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்காக கம்பம் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து தற்போது கூடுதலாக 2 யூனிட் டயாலிசிஸ் எந்திரங்கள் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் கம்பம் அரசு மருத்துவமனையில் 4 யூனிட் டயாலிசிஸ் எந்திரங்கள் செயல்படும். இதன் காரணமாக நோயாளிகளுக்கு தடை இன்றி சிகிச்சை வழங்கப்படும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து கம்பம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பொன்னரசன் கூறியதாவது, கம்பம் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 2 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வந்த டயாலிசிஸ் பிரிவில் 12 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது கூடுதலாக 2 யூனிட் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் புதிய கட்டிடத்தில் 4 யூனிட்டுகளுடன் டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 24 நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை வழங்கலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்