ரெயில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா?
Will the rail fare concession be available again?
கொரோனாவால் பறிப்பு
மூத்த குடிமக்களின் நலன் மற்றும் வசதிக்காக இந்திய ரெயில்வே வாரியம் 60 வயதை கடந்த ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், 58 வயதை கடந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியை ரெயில்வே வாரியம் செலவிட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியதால், இந்த வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த பயணிகளுக்கான கட்டண சலுகையை ரெயில்வே வாரியம் பறித்துக்கொண்டது. இதற்கு மூத்த குடிமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது
இந்த நிலையில் நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் படுக்கை வசதி, 3-ம் வகுப்பு ஏ.சி. வசதி பெட்டியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ரத்து செய்யப்பட்ட இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அளிப்பது பற்றி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் ரெயில்வே வாரியம் மவுனம் காத்து வருகிறது.
ஏற்புடையது அல்ல
பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று முதியோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து மூத்த குடிமக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-
லட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியை, உப்புக்கோட்டை) :- கொரோனாவை காரணம் காட்டி மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. ஆனால், ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்களுக்கும் இலவச பாஸ், கட்டண சலுகை தொடர்ந்து அமலில் தான் உள்ளது. அதுபோல், தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான இலவச பாஸ் என்ற சலுகைகள் பெறுபவர்களில் நீண்ட பட்டியலே உள்ளது. அப்படி இருக்கையில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் ரத்து செய்ததை பரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே கொடுத்து வந்த சலுகையை திடீரென பறிப்பது என்பது ஏற்புடையது அல்ல.
அசோகன் (விவசாயி, உப்புக்கோட்டை) :- எனக்கு வயது 60 ஆகிறது. ரெயில் பயண கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை சமூகநல சலுகையாக கருதவேண்டும். மூத்த குடிமக்கள் தினமும் பயணம் செய்யப் போவது இல்லை. 60 வயது வரை ரெயிலில் டிக்கெட் எடுத்து தான் பல்வேறு பயணங்கள் செய்து இருப்பார்கள். 60 வயதை கடந்த பின்னர் வாழும் காலத்தில் அதிக முறை ரெயில் பயணம் செய்யப் போவது இல்லை. எனவே, அந்த முதுமை கால பயணத்திற்கு வழங்கிய சலுகைகளை மீண்டும் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
இளங்கோ (ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி, ஆண்டிப்பட்டி) :- சில சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களை தவிர அனைத்து ரெயில்களிலும் முதியோர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. இந்திய ரெயில்வே துறையில் முதலில் வயது முதிர்ந்த ஆண்களுக்கு மட்டும்தான் கட்டண சலுகை வழங்கப்பட்டது. பிறகு தான் வயது முதிர்ந்த பெண்களுக்கும் கட்டண சலுகை வழங்கப்பட்டது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்றார்கள். கொரோனா காலகட்டத்தில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மீண்டும் முதியோர்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும். முதியோர்கள் அடிக்கடி ரெயிலில் பயணம் செய்யப் போவது இல்லை. அத்தியாவசிய மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பான தேவைக்கு தான் ரெயில் பயணங்கள் மேற்கொள்வது வழக்கம். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கருதக்கூடாது.
கட்டண சலுகை
ராமமூர்த்தி (தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர்) :- ரெயில் பயண கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மீண்டும் வழங்க வேண்டியது அரசின் கடமை. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் 3 முறை போராட்டம் நடத்தி இருக்கிறோம். மீண்டும் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். முதியோர்களுக்கான கட்டணச் சலுகை வழங்கும் வயது வரம்பை 70 ஆக உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்குவதில் லாபம், நஷ்டம் பார்க்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இதுதொடர்பாக தேனி ரெயில் நிலைய அதிகாரி (பொறுப்பு) முத்து இருளனிடம் கேட்டபோது, "மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அந்த சலுகைகளை வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஏ.சி. வசதியுள்ள முதல் வகுப்பு பெட்டியை தவிர இதர பெட்டிகளில் சலுகைகள் வழங்கலாம் என்று பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தெளிவான அறிவிப்பு வந்தால் தான் தெரியவரும். தற்போது நடக்க முடியாத முதியவர்களுக்காக ரெயில் நிலையத்தில் சக்கர நாற்காலி வசதி உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மூத்த குடிமக்கள் பயணம் செய்வதற்கான டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், அவர்களின் வயது சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்து கொடுக்கும் சலுகையும் தொடர்ந்து அமலில் உள்ளது" என்றார்.