ஏரல் அருகே 14¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ரைஸ்மில் உரிமையாளர் கைது

Near Eral Seizure of 14¾ tonnes of ration rice: Raismill owner arrested

Update: 2022-11-15 18:45 GMT

ஏரல் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 14¾ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கிய ரைஸ் மில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சோதனை

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ஏரல் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கே.கோட்டைச்சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், ஏட்டு செந்தட்டியான், பூலையா நாகராஜன் ஆகியோர் ஏரல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரல் அருகே உள்ள உடையார்குளம் பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில்லில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த ரைஸ் மில் உரிமையாளர் உடையார்குளத்தை சேர்ந்த கோயில்ராஜ் (வயது 62) என்பவர் ரேஷன் அரிசியை அரைத்து குருணையாக்கி கொண்டு இருந்தார்.

ரேஷன் அரிசி

உடனடியாக போலீசார் ரைஸ்மில்லில் சோதனை நடத்தினர். அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் 1100 கிலோ ரேஷன் அரிசியும், தலா 60 கிலோ எடை கொண்ட 225 மூட்டைகளில் மொத்தம் 13 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி குருணையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் கோயில்ராஜை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோயில்ராஜ், கடந்த ஒரு மாதமாக பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, ரைஸ்மில்லில் வைத்த குருணையாக அரைத்து மாட்டு தீவனத்துக்கும், கோழி பண்ணைகளுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்கு பதிவு செய்து கோயில்ராஜை கைது செய்தார். அவரிடம் இருந்து 14¾ டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்