ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை; செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்

A student commit suicide

Update: 2022-11-15 16:49 GMT

சின்னாளப்பட்டி அருகே செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

10-ம் வகுப்பு மாணவர்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள அஞ்சுகம் காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன். கொத்தனார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வாசு (வயது 15). இவர் சின்னாளப்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று வாசு, பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அங்கு உடைகளை மாற்றிவிட்டு வழக்கம்போல் டியூசனுக்கு சென்றார். அதன்பிறகு இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் அவரது பெற்றோர் டியூசன் நடத்தும் ஆசிரியரிடம் கேட்டபோது, வாசு டியூசனுக்கு வரவில்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுவின் பெற்றோர், உறவினர்கள் உதவியோடு அவரை இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

தண்டவாளத்தில் பிணம்

இதற்கிடையே இன்று காலை காந்திகிராமம் ரெயில்வே கேட்டுக்கும், செட்டிபட்டி ரெயில்வே கேட்டுக்கும் இடையே வாலிபர் ஒருவர் ெரயிலில் அடிபட்டு, தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக திண்டுக்கல் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தண்டவாளம் அருகே முகம் சிதைந்த நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். மேலும் அவரது அருகில் புத்தகப்பை ஒன்று கிடந்தது. அதனை போலீசார் எடுத்து சோதனை செய்தபோது, அதினுள் ஆதார் அட்டை இருந்தது. அதனை பார்த்தபோது, ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர், காணாமல் போன மாணவர் வாசு என்பது தெரியவந்தது.

பெற்றோர் கதறல்

இதுகுறித்து அறிந்த வாசுவின் பெற்றோர், உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கண்போரின் கண்களை குளமாக்கியது. இதைத்தொடர்ந்து மாணவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வாசு படிப்பில் சாதாரண மாணவர். ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்ற காலாண்டு தேர்வில் 4 பாடத்தில் அவர் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்தனர். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த வாசு செல்போனை பயன்படுத்தினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் விரக்தியடைந்த வாசு ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்