சர்க்கார்பதியில் மின் உற்பத்தி நிறுத்தம்

மழை இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக சர்க்கார்பதியில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-04-21 18:45 GMT

பொள்ளாச்சி

மழை இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக சர்க்கார்பதியில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரம்பிக்குளம் அணை

பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணையில் 17.8 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கலாம். இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

பரம்பிக்குளத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தூணக்கடவு தொகுப்பு அணை வழியாக சர்க்கார்பதிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு மின் உற்பத்தி செய்த பின் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கும், பீடர் கால்வாய் வழியாக ஆழியாறு அணைக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக பரம்பிக்குளம் அணை முழுகொள்ளளவை எட்டியது.

மின் உற்பத்தி நிறுத்தம்

இதற்கிடையில் மதகு உடைந்ததால் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. அதன்பிறகு புதிதாக மதகு பொருத்தப்பட்டு அணையில் தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பரம்பிக்குளத்தில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்திக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதற்கிடையில் மழை பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

இதன் காரணமாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீரை கொண்டு வராமல், பைபாஸ் வழியாக வினாடிக்கு 380 கன அடி தண்ணீர் காண்டூர் கால்வாயில் கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பைபாஸ் வழியாக...

பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 72 அடியில் இருந்து 14.74 அடியாக குறைந்து விட்டது. மேலும் அணைக்கு வினாடிக்கு 20 அடி நீர் தான் வரத்து உள்ளது. இதற்கிடையில் 22 அடி கொள்ளளவு கொண்ட தூணக்கடவு தொகுப்பு அணையும் 13 அடியாக குறைந்து விட்டது. சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு குறைந்தபட்சம் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்ததால் தான் 12 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்.

வினாடிக்கு 800 கன அடி சென்ற போது 24 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது அணையில் நீர்இருப்பு குறைவாக உள்ளதால் வினாடிக்கு 380 கன அடி நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லாமல் பைபாஸ் வழியாக காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக சர்க்கார்பதியில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்