ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்மூட்டைகள் சேதம்

விருத்தாசலம் பகுதியில் பெய்த கனமழையால், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2023-01-30 18:45 GMT

விருத்தாசலம், 

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதன் எதிரொலியாக நேற்று கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் காலையில் மேகக்கூட்டங்களுடன் சாரல் மழை பெய்தது. ஆனால், விருத்தாசலம் பகுதியில் கனமழையாக கொட்டியது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால், விருத்தாசலம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதத்துக்கு உள்ளானது.

அதேபோல் அறுவடை முடிந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து சேதத்துக்கு உள்ளானது.

மழையில் நனைந்த மூட்டைகள்

அந்த வகையில், விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, அருகே உள்ள அரியலூர், பெரம்பலூர் மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை அதிகளவில் நேற்று முன்தினம் இரவே எடுத்து வந்திருந்தனர்.

இவர்கள் மூட்டைகளை விற்பனைக்கூட வளாகத்தில் திறந்தவெளி பகுதியில் ஆங்காங்கே அடுக்கி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் பெய்த திடீர் மழையால், இந்த மூட்டைகள் நனைந்து சேதமானது.

விவசாயிகள் தார்ப்பாய்கள் கொண்டு மூட்டைகளை மூடியும், மழையில் இருந்து மூட்டைகளை அவர்களால் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி இருக்கலாம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

நஷ்டம்

இதேபோன்று, விருத்தாசலம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் மழையில் நனைந்து போனது. தற்போது பயிர்கள் அனைத்தும் சாய்ந்து இருப்பதுடன், நிலமும் ஈரமாகி விட்டதால், நெல் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் குறித்த நேரத்தில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

பெண்ணாடம்

பெண்ணாடம் பகுதியில் தற்போது சம்பா நெல் அறுவடைபணிகள் நடந்து வருகிறது. இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மாளிகைக்கோட்டத்தில் தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்து, குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை பெய்த திடீர் மழையால், நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால், விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

அதேபோன்று, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் பல இடங்களில் மழையில் நனைந்து சாய்ந்துவிட்டது. இதனால், அறுவடை பணியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க கூடிய நிலை உருவாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்