"கிறிஸ்தவத்தை ஒரு மதமாக நான் பார்க்கவில்லை" - 'செம்பி' பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரபு சாலமன் பேச்சு
மதத்தை பரப்புவதற்காக இயேசு கிறிஸ்து வரவில்லை, அன்பு மட்டுமே எங்கள் நோக்கம் என்று இயக்குனர் பிரபு சாலமன் கூறினார்.;
சென்னை,
மைனா, கும்கி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பிரபு சாலமன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் 'செம்பி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை கோவை சரளா, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் கோவை சரளாவின் நடிப்பு ரசிகரிகளிடையே பாராட்டைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கான 'செம்பி' படத்தின் சிறப்பு திரையிடல் காட்சி நடைபெற்றது.
இதன் பிறகு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது திரைப்படத்தின் இறுதியில் இயேசு கிறிஸ்துவின் போதனை குறித்த வசனம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் மதப்பிரச்சாரம் செய்கிறீர்களா? எனவும் இயக்குனர் பிரபு சாலமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், "கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் கிடையாது. அதை நான் ஒரு மதமாக பார்க்கவில்லை. மதத்தை பரப்புவதற்காக இயேசு கிறிஸ்து வரவில்லை" என்று கூறினார். அன்பு மட்டுமே எங்கள் நோக்கம் என்று குறிப்பிட்ட அவர், திரைப்படத்தில் இடம்பெற்றது யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் இதே போதனைகள் பகவத் கீதையிலும் இடம்பெற்றுள்ளதாக செய்தியாளர்கள் குறிப்பிட்ட போது, அந்த போதனைகளை படித்து வளர்பவர்கள் அதை தங்கள் படங்களில் வைக்கலாம் என்றும், தான் படித்து, வளர்ந்த விஷயங்களின் வெளிப்பாடு தான் தனது திரைப்படம் என்றும் தெரிவித்தார்.