சித்தாலப்பாக்கத்தில் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுமி பலி

சித்தாலப்பாக்கத்தில் வீட்டின் பின்புறம் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக பலியானார்.

Update: 2022-11-16 05:25 GMT

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அம்மு. இவர்களது மகள் சூரியதர்ஷினி (வயது 11). சிறப்பு குழந்தையான இச்சிறுமிக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் பெற்றோர் வீட்டில் இருந்தபோது, வீட்டின் பின்புறம் சிறுமி விளையாட சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் மகளை காணாமல் பெற்றோர் தேடிய நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் தலைகுப்புற விழுந்து மூழ்கிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பெரும்பாக்கம் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் விசாரணையில், வீட்டின் பின்புறம் விளையாடிய சிறுமிக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு அதனால் பள்ளத்தில் விழுந்து அதில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்