ஈரோட்டில் காலை, மாலை நேரங்களில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் மாணவ-மாணவிகள்; கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை

கோரிக்கை

Update: 2022-11-15 22:09 GMT

ஈரோட்டில் காலை, மாலை நேரங்களில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ-மாணவிகள் செல்கிறார்கள். எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆபத்தான பயணம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் தினமும் அரசு, தனியார் பஸ்களில் சென்று வருகிறார்கள். குறிப்பாக அரசு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெரும்பாலானவர்கள் அரசு பஸ்களிலேயே பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு உள்ளதால், அவர்கள் அரசு பஸ்களையே எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

ஒரே பகுதியில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இருக்கும்போது அந்த வழியாக இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மாணவர்கள் வேறு வழியின்றி படிக்கட்டில் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஒரு சில இடங்களில் மாணவிகளும் படிக்கட்டில் நின்று செல்வதை காணமுடிகிறது.

கூடுதல் பஸ்கள்

ஈரோடு பெருந்துறைரோடு, சென்னிமலைரோடு, சத்திரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இயக்கப்படும் பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. டவுன் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால் சில நிறுத்தங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் அங்குள்ள பயணிகள் பஸ்கள் கிடைக்காமல் அதிக சிரமப்படுகிறார்கள். எனவே கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலை, மாலை நேரங்களில் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை கூடுதல் பஸ் நிறுத்தங்களில் நின்றுவிட்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உயிருக்கு பாதுகாப்பு

இதுகுறித்து தமிழ் மாநில தொழிற்சங்க காங்கிரஸ் பேரவை மாவட்ட தலைவர் கே.பி.ரபிக் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில், "ஈரோடு சென்னிமலைரோடு, பெருந்துறைரோடு, சத்திரோடு, பவானிரோடு ஆகிய முக்கிய சாலைகளில் காலை, மாலை நேரங்களில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே தனி கவனம் செலுத்தி கூடுதல் பஸ்களை இயக்கி மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்", என்று கூறிஇருந்தார்.

ஈரோடு ரங்கம்பாளையம், பெருந்துறை உள்ளிட்ட ஊர்களுக்கு கல்லூரி நேரங்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்கனவே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தாலும், போதுமான போக்குவரத்து வசதி இல்லாமல் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள்.

எனவே இன்னும் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்பதே அவர்களது பிரதான கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்