திருப்பரங்குன்றம் அருகே சேதமடைந்த கட்டிடத்தில் ரேஷன் கடை; மழையில் நனையும் அரிசி மூடைகள்-பொதுமக்களுக்கு வினியோகிக்க முடியாத நிலை

திருப்பரங்குன்றம் அருகே சேதம் அடைந்த ரேஷன் கடை கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்த தால் அரிசி மூடைகள் நனைந்து சேதமடைந்தது

Update: 2022-11-15 19:36 GMT

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் அருகே சேதம் அடைந்த ரேஷன் கடை கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்த தால் அரிசி மூடைகள் நனைந்து சேதமடைந்தது.

ரேஷன்கடை சேதம்

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சூரக்குளம் ஊராட்சியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையின் முன்வாசல் கட்டிடம் சேதமடைந்து சிமெண்டு காரை பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் எலும்பு கூடாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. இதேபோல கட்டிடத்தின் வெளிப்புறத்தில் நாலாபுறமும் கீறல் மற்றும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் உணவு பொருட்கள் வைக்கக்கூடிய கட்டிடத்தின் உள்புறத்தின் சுவரில் சிமெண்டு காரை பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. சேதமடைந்த இடத்தில் இருந்து அவ்வப்போது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தவாறு உள்ளது. இதனால் திடீரென்று கட்டிடம் இடிந்து விழுமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.

மழைநீரில் நனைந்துஅரிசி சேதம்

இந்தநிலையில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் மழையால் சேதமடைந்த பகுதியில் நீர் கசிந்து கட்டிடத்தின் உள்புறத்தில் புகுந்தது. அதில் சில அரிசி மூடைகள் மற்றும் கோதுமை மூடைகள் நனைந்து சேதமானது. இதற்கிடையே அப்பகுதி மக்களில் சிலர் நேற்று ரேஷன் கடைக்கு வந்தனர். அப்போது அரிசி மூடைகள் நனைந்து இருப்பதை கண்டு வேதனை அடைந்தனர்,. மேலும் அரிசி வாங்காமல் திரும்பினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அரிசி மூடைகள் நனைந்தாலும், தரை முழுவதும் மழைதண்ணீர் படிந்து இருப்பதாலும் அரிசி மூடைகளில் இருந்து ஒருவித நாற்றம் வருகிறது. ஆகவே அரிசியை வாங்காமல் வீட்டுக்கு திரும்பி செல்கிறோம்.

சேதமடைந்த ரேஷன் கடையை முழுமையாக அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் கூறும்போது, கிராமசபை கூட்டங்களிலும், ஊராட்சி மன்ற கூட்டத்தில் புதிய ரேஷன்கடை அமைக்க வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்