சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உரிய சலுகைகளை வழங்கக்கோரிய வழக்கு

சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உரிய சலுகைகளை வழங்கக்கோரிய வழக்கு

Update: 2022-11-15 19:23 GMT


மதுரையைச் சேர்ந்த மதுரேசன் உள்ளிட்ட சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் ஏராளமான பதக்கங்கள் பெறுகின்றனர். சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறுபவருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ரொக்கப்பரிசை மத்திய அரசு வழங்குகிறது.

மாநில அரசு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்குகிறது. பொதுவாக ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவோருக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை விருது மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி வரை வழங்கப்படுகிறது. அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் மத்திய, மாநில அரசுகள் சமமாக பார்ப்பதில்லை. சிறப்புத்திறன், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வழக்கமானவர்களை போல வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதில்லை. அனைத்து வீரர்களையும் சமமாக நடத்துவதுதான் சரியானது.

எனவே தமிழகத்தில் சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், பொது வீரர்களுக்கு சமமாக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்களின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் சாதகமான முறையில் பரிசீலித்து உரிய உத்தரவை 12 வாரத்தில் பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்