கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரும்- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை

கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரித்தனர்.

Update: 2022-11-15 18:59 GMT


கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஆக்கிரமிப்பு வழக்கு

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த சாவித்திரி துரைசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் தீவிர சிவபக்தை. தொன்மையான ஆதீன மடங்களில் தருமபுர ஆதீனமும் ஒன்று. தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் கலாசாரத்தை பறைசாற்றுவதில் தருமபுர ஆதீனம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதன்கீழ் ஏராளமான கோவில்களும், நிலங்கள் உள்பட சொத்துக்களும் உள்ளன. திருச்சி உய்யக்கொண்டான் உஜ்ஜீவநாதர் கோவிலும் தருமபுர ஆதீன நிர்வாகத்தின்கீழ் உள்ளது.

இந்த கோவிலுக்கு வலதுபுறம் உள்ள சுமார் 5 ஏக்கர் நிலம், தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர்கள் பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

நிலத்தை மீட்டு கொடுங்கள்

இதுசம்பந்தமாக கீழ்கோர்ட்டில் நடந்த வழக்கில், அந்த நிலம் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படவில்லை. இப்படியே விட்டுவிட்டால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டு காணாமல் போகும் நிலை ஏற்படும். எனவே உய்யக்கொண்டான் மலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உஜ்ஜீவநாதர் கோவில் நிலத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுசம்பந்தமாக உரிய விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.

நீதிபதிகள் எச்சரிக்கை

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல்கள் கார்த்திகேயன், வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகி, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்காக அளவீடு செய்யும் பணி தாமதமாகி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்றனர்.

இதை கேட்ட நீதிபதிகள், ஒரே அலுவலக வளாகத்தில் இருக்கும் அதிகாரிகள் தங்களிடம் இருக்கும் கோப்புகளை அடுத்தவரிடம் உரிய நேரத்தில் சேர்க்காமல் காலம் தாழ்த்துவதை ஏற்க இயலாது. கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை மீட்க அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றால், பணியிடை நீக்கம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் சிறைக்கு செல்ல நேரிடும், என எச்சரித்தனர்.

பின்னர் இந்த வழக்கில் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்