பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணி
Sewer cleaning work without protective equipment
தேங்கி நிற்கும் கழிவுநீர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சில வாய்க்கால்கள் மட்டுமே மூடப்பட்டு உள்ளன. பெரும்பாலான கழிவுநீர் வாய்க்கால்கள் மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் கழிவுநீர் வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் தற்போது தூர்ந்துபோன நிலையில், கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டு ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்கள் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றமும் வீசுகிறது.
வாய்க்காலில் அடைப்பு
இந்த நிலையில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் கனமழை வரை பெய்து வருவதால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் நடந்து செல்லும் போது மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், மழையினால் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்து மழைநீர் தேங்காத வகையில் செல்ல நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் நகராட்சியை பொருத்தவரை நிரந்தர தூய்மை பணியாளர்கள் 21 பேரும், ஒப்பந்த அடைப்படையில் 134 பேரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் 13-வது வார்டில் உள்ள சன்னதி தெரு செல்லும் திருப்பத்தில் கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மழை நீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் சென்றதால் கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி...
அப்போது அவர்களுக்கு தூய்மை பணிக்கான கையுறை, ஷூ உள்ளிட்ட எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படாததால் வெறும் கையுடன் சாக்கடையில் கையை விட்டு பிளாஸ்டிக், அரிசி சாக்கு, காலணி உள்ளிட்ட பல நாள் தேங்கியிருந்த குப்பை அடைப்பு பொருட்களை வெளியில் எடுத்து சுத்தம் செய்வது, வெறுங்காலுடன் சாக்கடையில் நடப்பது, சாக்கடை நீரை சுவாசிக்கும் அளவிற்கு சாக்கடை வாய்க்காலில் குனிந்து அடைப்புகளை எடுப்பது என பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்க பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் செய்யாதது, வேதனை அளிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினால் அவர்களையும் பாதுகாத்து, நம்மையும் நோயிலிருந்து பாதுகாப்பதற்கான பணிகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் செய்வார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதில் நகரப் பகுதிகளில் பொறுப்பில்லாத சில குடியிருப்பு வாசிகள் தாங்கள் பயன்படுத்தும் செப்டிக் டேங்கில் இருந்து வரும் உபரி நீரை சாக்கடை நீரில் வெளியேற்றி வருகின்றனர். இதனால் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியாளர்கள் சுத்தம் செய்யும் போது மிகுந்த மன உளைச்சல் மற்றும் வேதனை அடைகின்றனர்.
பணியாளர்கள் வேதனை
ஒப்பந்த தூய்மை பணியாளரிடம் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காதது பற்றி கேட்டபோது அவர்கள், தங்களுக்கு பெருக்குவதற்கு துடைப்பம், குப்பைகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளும்போது கை உறை, கால் உறையும் வழங்கவில்லை. மேலும் சீருடை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. சரிவர சம்பளமும் வழங்கப்படுவது இல்லை என குற்றச்சாட்டு கூறுகின்றனர். கொரோனா காலத்தில் எங்களை கடவுளாக பாவித்தவர்கள் இன்று குப்பை அள்ளுவது, கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்வதை கண்டும் காணாமல் அதிகாரிகள் மெத்தனப்போக்கில் இருக்கிறார்கள். எங்களுக்கு நோய் ஏற்பட்டால் எங்கள் குடும்பங்களை யார் பார்த்துக்கொள்வார்கள்? என வேதனை தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் துயர் துடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவீன வசதி
சின்னவளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம் கூறுகையில், கழிவுநீர் தொட்டியில் இறங்கும்போது விஷவாயு தாக்கி ஆண்டுக்கு சுமார் 15 துப்புரவுத் தொழிலாளர்கள் இறக்கின்றனர். இந்த அவலம் தொடர்ந்து வருவது வேதனைக்குரியது. மேலை நாடுகளைப்போலவே அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் கிடைக்கப்பெறும் சூழலில்தான் நாம் இருக்கிறோம். அரசின் பல துறைகளிலும் நவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டு விட்ட நிலையில் துப்புரவுத் தொழிலில் மட்டும் நவீன வசதிகளை பெரிய அளவில் கொண்டு வரவில்லை. சாக்கடை அடைத்துக் கொண்டால் மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியே எடுத்து விட முடியும். ஆனால் மண் மற்றும் சகதியை ஆள் இறங்கித்தான் அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது. தூய்மை பணியாளர்கள் காலை நேரத்தில் வேலைக்கு செல்லும்போது கை, கால்களை சோப்பு போட்டு தூய்மையாக கழுவிய பின், தேங்காய் எண்ணெயை கை, கால்களில் தேய்த்த பிறகு பாதுகாப்பு உபகரணங்களை போட்டுக்கொண்டு தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் என வேறுபாடு கிடையாது. அவர்கள் அனைவருக்கும் சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இந்த நிலையில் பாதுகாப்பு அற்ற நிலையில் இதுபோன்ற வேலைகளை செய்வது வேதனை அளிக்கிறது என்றார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ஓய்வூதியர் சங்க தலைவர் சுந்தரேசன் கூறுகையில், கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவை அடைத்து வருவதால் ஒருசில கண்ணாடி பாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. இதில் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இறங்கி பணி மேற்கொள்ளும்போது அவர்களின் கால்களில் கண்ணாடி பாட்டில்கள் கிழிக்கும் நிலை உள்ளது. இதையும் பொருட்படுத்தாமல் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பணிகளை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.