தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்

தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-09-20 18:45 GMT

வால்பாறை, 

தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

காட்டு யானைகள்

வால்பாறை பகுதியில் சமீப நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கேரள வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் யானைகள், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன. எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.

ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லும் வழியில் உள்ள தேயிலை தோட்டங்களில் பட்டப்பகலில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டு நிற்கிறது. இதனால் அந்த எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

கண்காணிப்பு தீவிரம்

மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரக வனத்துறையினர் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைய விடாமல் கண்காணித்து வருகின்றனர். இயற்கை வன வள பாதுகாப்பு மையத்தினர், எஸ்டேட் பகுதி மக்களுக்கு காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கை செய்யும் வகையில், காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் சிவப்பு விளக்குகளை ஒளிரச் செய்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வால்பாறை வனப்பகுதிகளுக்கு வரக்கூடிய கால சூழ்நிலை உருவாகிவிட்டதால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும். எனவே, இனிவரும் காலங்களில் வால்பாறை பகுதியில் அனைத்து எஸ்டேட் பகுதி மக்களும் கவனமுடன் இருக்க வேண்டும். யானைகளால் உயிர் சேதங்கள் ஏற்படாமல் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்