காது கேட்கும் தன்மையை இழக்கிறீர்களா? -கவனத்தில் கொள்ள வேண்டிய அறிகுறிகள்

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பு படி இந்தியர்கள் சுமார் 6 கோடியே 30 லட்சம் பேர் காது கேளாமையுடன் தொடர்புடைய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

Update: 2023-03-23 16:18 GMT

5 பேரில் 4 பேருக்கு காதுகேளாமை பிரச்சினைக்கான அறிகுறிகள் இருப்பது தெரிவதில்லை. இந்த 7 அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் காதுகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமானது.

முணுமுணுப்பது போல் உணர்வது

உங்களிடம் மற்றவர்கள் பேசும்போது அவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் சரியாக புரியாது. அமைதியான சூழலில் இருந்தும் கூட அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமல் போகும். அவர்கள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றும். இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தால் காதுகளை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

போனில் பேசுவதற்கு சிரமப்படுவது

'நீங்கள் பேசுவது எனக்கு சரியாக கேட்கவில்லை. உங்கள் குரல் தெளிவாக இல்லை. உங்கள் பேச்சில் சில வார்த்தைகள் தெளிவாக கேட்கவில்லை. அந்த வார்த்தைகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை' என்பது போன்ற வார்த்தைகளை போனில் பேசும்போது எப்போதாவது பயன்படுத்தலாம். நெட்வொர்க் பிரச்சினை காரணமாக இத்தகைய இடையூறு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் நீங்கள் பேசும்போதெல்லாம் எதிர்முனையில் பேசுபவரிடம் இத்தகைய வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தால் அவை உங்கள் செவித்திறனில் ஏதோ குறைபாடு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.

உதட்டு அசைவை நம்புவது

மற்றவர்கள் பேசும்போது அவர்களின் உதட்டு அசைவை வைத்து என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முயல்வதும் காது கேளாமைக்கான அறிகுறிதான். ஒவ்வொரு முறையும் அவர்களின் உதட்டு அசைவை நம்ப தொடங்கினீர்கள் என்றால் காது நிபுணரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.

திரும்பச் சொல்லும்படி கேட்பது

'மன்னிக்கவும். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பது எனக்கு புரியவில்லை?', 'தயவுசெய்து மீண்டும் சொல்ல முடியுமா?', 'நீங்கள் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குழப்பமாக இருக்கிறது' என்பது போன்ற வார்த்தைகளை மற்றவர்களுடன் பேசும்போது பயன்படுத்தினால் இதுவும் காதுகேளாமைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கலாம்.

டி.வி. ஒலி அளவை அதிகரிப்பது

நீங்கள் டி.வி. பார்த்துக்கொண்டிருக்கும்போது, 'ஏன் இப்படி அதிக சத்தத்தில் வைத்து டி.வி. பார்க்கிறீர்கள்? டி.வி. ஒலி அளவு அதிகமாக இருக்கிறது. எங்கள் காதுகளுக்கு அசவுகரியமாக இருக்கிறது. கேட்பதற்கு எரிச்சலாக இருக்கிறது' என்பது போன்ற வார்த்தைகளை குடும்பத்தினர் புகாராக தெரிவித்தால் அது உங்கள் காது கேளாமைக்கான அறிகுறியாகும்.

கூட்டம் கூடும் இடங்களை தவிர்ப்பது

சத்தமான சூழலில் பிறருடைய உரையாடலை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். பொது இடங்களிலோ, சுப நிகழ்ச்சி களிலோ, நிறைய பேர் கூடி இருக்கும் கூட்டத்திற்கு மத்தியிலோ ஒருவர் பேசுவதை புரிந்து கொள்வதற்கு சிரமப்பட்டாலோ, அத்தகைய கூட்டம் கூடும் இடங்களை தவிர்த்தாலோ அது காதுகேளாமை பிரச்சினைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக அமைந்திருக்கலாம்.

மற்றொருவரை சார்ந்திருப்பது

ஒருவர் என்ன பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல், அதனைக் கேட்டு சொல்வதற்கு மற்றொருவரை சார்ந்திருந்தால் உங்கள் செவித்திறனை பரிசோதிக்க வேண்டியது அவசியமானது.

இத்தகைய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி உணர்ந்தால் காதுகளை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்