மிதக்கும் அதிசயம்

உலகின் மிகவும் பழமை வாய்ந்த விவசாய தொழில்நுட்பம் இன்றும், மெக்ஸிகோவில் பாதுகாக்கப்படுகிறது. அதை சினாம்பாஸ் என்று அழைக்கிறார்கள். இதற்கு மிதக்கும் தோட்டங்கள் என்று பொருள். இது மெக்ஸிகோவின் எக்ஸோசிமில்கோ கால்வாய்க்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த மிதக்கும் விவசாய தீவு, ஆஸ்டெக் பேரரசு காலத்தின் கடைசியாக எஞ்சியிருக்கும் அடையாள சின்னமாகும். இன்றைக்கும் கூட இந்த மிதக்கும் வேளாண் பண்ணைகளிலிருந்து மெக்சிகோ நகர் மக்களுக்கு உணவு கிடைக்கிறது. இதன் வரலாற்றை தெரிந்து கொள்வோமா...!

Update: 2022-11-06 07:56 GMT

1325-ம் ஆண்டில் மெக்சிகோ பள்ளத்தாக்கு பகுதிக்கு ஆஸ்டெக் பழங்குடியினர் வந்தபோது, டெக்ஸ்கோகோ ஏரியின் ஒரு அசாதாரண காட்சியால் அவர்கள் வரவேற்கப்பட்டனர் என்று வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. கழுகு ஒன்று தன் அலகில் பாம்புடன் ஏரியின் சதுப்பு நிலக்கரையில் இருந்த முட்கள் நிறைந்த கற்றாழையில் அமர்ந்திருந்தது. இந்த இடத்தை கடவுள் தங்களுக்கான பகுதியாக குறிப்பிடுவதாக கருதிய அவர்கள், அங்கு தங்கள் நகரத்தை அமைத்து வாழத் தொடங்கினர்.

ஐந்து ஏரிகள், சதுப்பு நிலங்களால் இந்தப் பகுதி சூழப்பட்டுள்ளது. நிலப்பரப்பு குறைவாக இருந்ததால், உணவுக்காக மிதக்கும் தோட்டங்களை அமைப்பது என்ற புத்திசாலித்தனமான திட்டத்தை அவர்கள் செயல்படுத்தினர். பாலங்கள், பலகை நடைபாதைகள் மூலம் மிதக்கும் தோட்டங்களும், குடியிருப்புகளும் இணைக்கப்பட்டன. ஏரி படுகைகள் கால்நடைகள் மேய்ச்சல், வேட்டையாடுதல், உணவு தேடுதல் ஆகியவற்றுக்காக உபயோகிக்கப்பட்டன.

தண்ணீர் மீதான இந்த அறிவார்ந்த வேளாண் தொழில்நுட்பமானது, ஆஸ்டெக் பழங்குடியினர் தங்கள் பேரரசை தக்கவைத்துக் கொள்ள உதவியது.

உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள மிதக்கும் தோட்டங்கள் இன்னும் வளமானதாக சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன. மிதக்கும் தோட்டம் என்பது தண்ணீரை மிகவும் புத்திசாலித்தனத்துடன் உபயோகிக்கும் முறையாகும். மிதக்கும் தோட்டத்தின் அடுக்குகள், நிலத்தடி நீரை நேரடியாக உறிஞ்ச தேவைக்கு ஏற்ற வகையில் உபயோகிக்கும் நீளமான வேர்களைக் கொண்ட பயிர்களை பயிரிடும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டவை. இதனால் இங்கு பயிரிடப்படும் பயிர்களுக்கு நீர்பாசனம் செய்யவேண்டிய தேவை குறைகிறது.

கொரோனா பரவல் தொடங்கிய ஊரடங்கு நிலவிய காலத்திலும், மிதக்கும் தோட்டமானது மெக்சிகோ நகரவாசிகளுக்கு கைகொடுத்தது. நகர எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், 700 ஆண்டுகள் பழமையான மிதக்கும் தோட்டங்கள், அவர்களுக்கு உணவளிக்க தொடங்கின. இதைத்தொடர்ந்து, ஏராளமான விவசாயிகள் மிதக்கும் தோட்டங்களில் விவசாயம் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதோடு, மெக்சிகோ மக்களுக்குப் போதிய உணவை அளித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்