சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீரர் பிரணோய் தோல்வி
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரணோய் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்து உள்ளார்.;
பேசல்,
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரணோய் மற்றும் இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டி ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில், தொடக்கத்திலேயே ஜோனாதன் அதிரடி ஆட்டம் வழியே புள்ளிகளை சேர்க்க தொடங்கினார். எனினும், ஒரு கட்டத்தில் 7-7 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர். இதன்பின்பு மளமளவென்று புள்ளிகளை எடுத்த ஜோனாதன் முதல் செட்டை 12-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி கொண்டார்.
இதனை தொடர்ந்து, நடந்த 2வது செட்டுக்கான போட்டியிலும், ஜோனாதனின் அதிரடி தொடர்ந்தது. எனினும், 2-2, 4-4, 5-5 என புள்ளி கணக்கு நகர்ந்தது. இதன்பின்பு, பிரணோய் தவறாக கணித்து ஆடியது ஜோனாதனுக்கு வசதியாக அமைந்து விட்டது.
அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றிய அவர், 9-13 என முன்னிலை பெற்றார். இதனை பிரணோய் போராடி 13-13 என்ற நிலைக்கு கொண்டு சென்றார். எனினும், தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி முன்னேறிய ஜோனாதன் இறுதியில், 18-21 என்ற கணக்கில் 2வது செட்டையும் கைப்பற்றினார். இதனால், 12-21, 18-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை தட்டி சென்றுள்ளார்.