ஒரே நாளில் ரூ.97 லட்சம் டிப்ஸ்! சோமோட்டோ டெலிவரிமேன்களுக்கு அள்ளிக் கொடுத்த வாடிக்கையாளர்கள்
புத்தாண்டுக்கு முந்தைய நாளில் கொண்டாட்டம் களை கட்டியிருந்ததால் நாடு முழுவதும் ஆன்லைன் உணவு ஆர்டர்கள் பலமடங்கு அதிகரித்து இருந்தது;
புதுடெல்லி,
இந்தியாவில் உணவு விநியோக சந்தையில் சோமோட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. தங்களுக்கு பிடித்தமான உணவுகளை பிடித்த ஓட்டல்களில் இருந்து வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்பதால் வாடிக்கையாளர்களும் இந்த செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பும் பல பில்லியன்களை தாண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இந்த நிறுவனத்தில் டெலிவரி மேன்களாக பணியாற்றுகிறார்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் காலை முதல் இரவு வரை தங்கள் பைக்குகளில் உணவு பொட்டலத்தை வைத்துக்கொண்டு இந்த தொழிலாளர்கள் சிட்டாய் பறப்பதை காண முடியும். இப்படி உணவு விநியோகம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் பலரும் டிப்ஸ் ஆக கூடுதல் பணத்தை கொடுத்து வருகின்றனர். உணவு ஆர்டர் செய்யும் செயலிகள் மூலமாகவே டிப்ஸ் பணத்தையும் கொடுக்கும் வசதி உள்ளது. இப்படி வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொடுக்கும் பணம் முழுவதுமாக டெலிவரிமேன்களுக்கே உணவு விநியோக நிறுவனங்கள் கொடுக்கின்றன.
இந்த நிலையில், புத்தாண்டுக்கு முந்தைய நாளில் அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி டிப்ஸ் தொகையாக மட்டும் 97 லட்ச ரூபாய்க்கு மேல் வாடிக்கையாளர்கள் அளித்து இருப்பதாக சோமோட்டோ நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சோமோட்டோ நிறுவனர்களில் ஒருவரான தீபந்தர் கோயல், "லவ் யூ இந்தியா! தற்போதுவரை 97 லட்ச ரூபாயை டிப்ஸ் ஆக கொடுத்து இருக்கிறீர்கள், டெலிவரி பார்ட்னர்கள் தொடர்ந்து டெலிவரி செய்து வருகிறார்கள்" எனப் பதிவிட்டு இருந்தார். டிசம்பர் 31 ஆம் தேதி இரவு தீபந்தர் கோயல் இந்த பதிவை வெளியிட்டு இருந்தார். தற்போது இந்த பதிவு வேகமாக பரவி வருகிறது. நெட்டிசனக்ள் பலரும் வியப்புடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.