சர்ச்சையான ஹிருத்திக் ரோஷன் விளம்பரம் - மன்னிப்பு கோரியது ஜொமேட்டோ நிறுவனம்
இந்த விளம்பரம் யாருடைய நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டது இல்லை என ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.;
மும்பை,
உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோ ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் ஹிருத்திக் ரோஷன் மகாகல் என்ற இடத்திலிருந்து உணவு ஒன்றை ஆர்டர் செய்வார்.
உணவு ஆர்டர் செய்த மகாகல் என்ற இடம் மஹாகாலேஷ்வர் கோவிலைக் குறிப்பதாகவும், உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோவில் வளாகத்தில் மட்டுமே பக்தர்களுக்கு கொடுக்கப்படும் இலவச உணவை ஒருவர் எவ்வாறு ஆன்லைன் டெலிவரி ஆப் மூலம் வாங்க முடியும்? என மகாகல் கோவில் மதகுருக்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
உடனடியாக அந்த விளம்பரத்தை அகற்றக் கோரியும் இந்த செயல் குறித்து ஜொமேட்டோ நிறுவனத்தை மன்னிப்பு கேட்க கோரியும் மகாகல் கோவில் மதகுருக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஜொமேட்டோ நிறுவனம் இந்த விளம்பரத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த விளம்பரம் மகாகல் கோவிலைக் குறித்து எடுக்கவில்லை என்றும் உஜ்ஜயினியில் உள்ள மகாகல் என்ற உணவகம் குறித்தே எடுக்கப்பட்டது என்றும் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த விளம்பரம் யாருடைய நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டது இல்லை என்று ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.