எலியை கொன்றவர் மீது புகார்; மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல உயிரிழந்த எலி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2022-11-26 09:34 GMT

புதுடெல்லி

வடமாநிலங்களில் மாடுகள் புனிதமாக வழிப்படப்படுகின்றன.  19 மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல எலிகள் 'பிள்ளையாரின்' வாகனமாக கருதப்படுவதால் எலிகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் சில இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் விலங்குகள் உரிமை ஆர்வலரான விக்கேந்திரன் சம்பவம் நடந்த அன்று மதியம் சதர் கோட்வாலியின் காந்தி மைதானம் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்குள்ள பாறை மீது மனோஜ் குமார் எனும் இளைஞன் ஒருவன் அமர்ந்து எலியின் வாலில் கயிற்றை கட்டிக்கொண்டிருந்தார். இதைக்கண்ட விக்கேந்திரன் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று மனோஜ் குமாரிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனோஜ் குமார் அந்த கயிற்றின் மறு முனையில் கல்லை கட்டி அருகில் இருந்த வாய்க்காலில் வீசியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ந்துபோன விக்கேந்திரன் உடனடியாக வாய்க்காலில் குதித்து எலியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் எலி உயிரிழந்துவிட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த எலியுடன் வந்த விக்கேந்திரன் எலியை கொன்றதற்காக விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனையடுத்துமனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல உயிரிழந்த எலி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரெண்டு அலோக் மிஸ்ரா கூறியதாவது:-

"சம்பவம் தொடர்பாக இளைஞரை உடனடியாக அழைத்து விசாரித்துள்ளோம். முதலில் அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு எலியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அங்கு போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் பரேலியில் உள்ள ஐ.வி.ஆர்.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.

அதேபோல இந்த குற்றம் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது என்றும் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்