இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குடகு,-
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா பிளிகேரே கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி கணவர் உள்ளார். இந்தநிலையில் இளம்பெண் இரவு 9.30 அளவில் வீட்டின் வெளியே நின்று செல்போனில் பேசி கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 மர்மநபர்கள் வந்தனர். இதையடுத்தது மர்மநபர்கள் இளம்பெண்ணை அருகில் உள்ள தோட்டத்திற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்றனர். அப்போது மர்ம நபர்கள் தப்பியோடினர். அவர்களை பொதுமக்கள் துரத்தி சென்று ஒருவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவரை சோமவார் பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இளம் பெண்ணை அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர் மாதாபுராவை சேர்ந்த ராஜா (வயது 25) என்பதும், தப்பியோடிவர்கள் நவுஷத் (25), பாரூக் (27) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சோமவார் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.