ஆன்லைனில் அறிமுகமான பெண்ணுடன் டேட்டிங் சென்ற இளைஞர்... ரூ.1.2 லட்சம் மோசடி செய்த கும்பல்

டெல்லியில் ஆன்லைனில் அறிமுகமான பெண்ணுடன் டேட்டிங் சென்ற இளைஞரிடம் ரூ.1.2 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2024-06-29 16:19 GMT

புதுடெல்லி,

டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர் ஒருவர், 'டிண்டர்' செயலி மூலம் வர்ஷா என்ற இளம்பெண் ஒருவருடன் அறிமுகமாகி இருக்கிறார். அந்த பெண் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கிழக்கு டெல்லியில் உள்ள விகாஸ் மார்க் பகுதியில் அமைந்திருக்கும் பிளாக் மிரர் கபே என்ற உணவகத்திற்கு வருமாறு இளைஞரை அழைத்திருக்கிறார்.

இதன்படி இருவரும் அந்த உணவகத்திற்கு சென்று கேக் உள்ளிட்ட சிற்றுண்டி உணவுகளை சாப்பிட்டுள்ளனர். அப்போது வர்ஷா, தனது குடும்பத்தினர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து அவசரமாக கிளம்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரிடம் உணவக ஊழியர்கள், சாப்பிட்ட தொகைக்கான ரசீதை வழங்கியுள்ளனர்.

அந்த ரசீதை கண்ட இளைஞர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். ஏனெனில், அவர் செலுத்த வேண்டிய தொகை ரு.1,21,917.70 என அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து உணவக மேலாளரிடம் அவர் கேட்டபோது அவரை அவர்கள் தனியே அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி உணவக உரிமையாளர் அக்ஷய் பஹ்வாவின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1.2 லட்சத்தை அந்த இளைஞர் செலுத்தியுள்ளார்.

பின்னர் உணவகத்தில் இருந்து வெளியே வந்த இளைஞர், நேராக காவல்நிலையத்திற்குச் சென்று நடந்த சம்பவங்களை போலீசாரிடம் விவரித்துள்ளார். அந்த இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சஞ்சய் குப்தா தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்திற்குச் சென்று விசாரணை நடத்தி அக்ஷய் பஹ்வாவை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த குறிப்பிட்ட உணவகத்திற்கு அக்ஷய் பஹ்வா, அன்ஷ் குரோவர் மற்றும் வன்ஷ் பஹ்வா என மொத்தம் 3 உரிமையாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் 'மேஜை மேலாளர்கள்' என்ற பெயரில் சிலரை நியமித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன்படி அந்த உணவகத்தில் பணிபுரியும் 'மேஜை மேலாளர்' ஆர்யன் என்பவர், சம்பந்தப்பட்ட இளைஞரிடம் ஆன்லைன் செயலி மூலம் 'வர்ஷா' என்ற பொய்யான பெயரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த திட்டத்தில் 25 வயதான அப்சான் பர்வீன் என்ற பெண்ணும் உடந்தையாக செயல்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் திட்டமிட்டு இளைஞரை உணவகத்திற்கு வரவழைத்து அவரிடம் ரு.1.2 லட்சத்தை மோசடி செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் இளம்பெண் அப்சான் பர்வீனை தேடிச் சென்றனர். அந்த பெண் மற்றொரு உணவகத்தில் மற்றொரு நபருடன் 'டேட்டிங்' செய்து கொண்டிருந்தபோது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இவர்கள் இதுபோல் திட்டமிட்டு பல இளைஞர்கள் ஏமாற்றி பணம் பறித்துள்ளனர் என்றும், இது குறித்து பெரும்பாலும் யாரும் புகார் அளிக்க முன்வருவதில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி திட்டத்தின் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் பணத்தில் 15% அப்சான் பர்வீனுக்கும், 45% உணவகத்தின் மேஜை மேலாளர்களுக்கும், மீதமுள்ள 40% உணவக உரிமையாளர்களுக்கும் பங்கிடப்பட்டு உள்ளது. டெல்லி மட்டுமின்றி மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் இதுபோன்ற மோசடிகள் நடப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் தற்போது அப்சான் பர்வீன், அக்ஷய் பஹ்வா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்