கருப்பாக இருக்கிறாய் - முடியை பிடித்து தர தரவென இழுத்து கோவிலில் இருந்து பெண் வெளியேற்றம்

கர்நாடகாவில் பூசாரி மீது எச்சில் துப்பி, கடவுள் வெங்கடேஸ்வரா எனது கணவர் என கூறி கருவறைக்குள் பெண் நுழைய முயன்றுள்ளார்.

Update: 2023-01-07 04:44 GMT



பெங்களூரு,


கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி பகுதியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஒன்று அமைந்து உள்ளது. இதில், சாமி கும்பிட சென்ற பெண் ஒருவரை கோவிலின் அறங்காவலர்களில் ஒருவரான முனிகிருஷ்ணப்பா என்பவர் அடித்து, துன்புறுத்தியுள்ளார்.

அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்தபடி, கோவிலில் இருந்து தர தரவென்று இழுத்து சென்று வெளியே விட்டுள்ளார். இதுபற்றி சி.சி.டி.வி. காட்சிகள் வெளியான நிலையில், அந்த பெண் தாக்குதல் பற்றி போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அதில், முனிகிருஷ்ணப்பா என்பவர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார். குளிக்காமலோ அல்லது தூய்மையாக இல்லாமலோ கோவிலுக்கு வர கூடாது என கூறினார். கோவிலுக்குள் உன்னை அனுமதிக்க முடியாது.

கருப்பாக இருக்கிறாய் என கூறி, உடல்ரீதியாக திட்டியும், அடித்தும் துன்புறுத்தினார் என தெரிவித்து உள்ளார். இரும்பு தடி கொண்டு அடிக்கவும் முயன்றார். கோவில் பூசாரிகள் அவரை தடுத்தனர்.

இதுபற்றி வெளியே கூறினால், என்னையும், கணவரையும் கொலை செய்து விடுவேன் என அவர் மிரட்டினார் என தெரிவித்து உள்ளார். எனினும், குற்றச்சாட்டுக்கு உள்ளான முனிகிருஷ்ணப்பா தரப்பிலும் பதிலுக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அதில், அந்த பெண்ணை கோவிலில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஏனெனில், கோவில் கருவறைக்குள் அத்துமீறி அவர் நுழைய முயன்றார். அந்த பெண் கோவிலுக்கு வந்து, என் மீது சாமி வந்து விட்டார். வெங்கடேஸ்வரா எனது கணவர். கோவில் கருவறையில் வெங்கடேசனின் அருகே நான் அமர வேண்டும் என அவர் வற்புறுத்தினார்.

ஆனால், பூசாரிகள் அவரை விடவில்லை. அவரை தடுத்து நிறுத்தியபோது ஆத்திரமடைந்து, பூசாரிகளில் ஒருவர் மீது அந்த பெண் எச்சில் துப்பினார். பல முறை அவரை வெளியே செல்லும்படி பணிவாக கேட்டு கொள்ளப்பட்டது.

அதனை அவர் கேட்கவில்லை. அதனால், நாங்கள் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி இழுத்து வெளியே விடவேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்து உள்ளார்.

இருதரப்பு புகாரையும் பெற்று கொண்ட போலீசார், பெண் மீது தாக்குதல் நடந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை பெற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்