யத்னால் எம்.எல்.ஏ. மீது மேலிட ஒழுங்கு குழு நடவடிக்கை எடுக்கும்; பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பேட்டி

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் யத்னால் எம்.எல்.ஏ. மீது மேலிட ஒழுங்கு குழு நடவடிக்கை எடுக்கும் என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-22 18:45 GMT

பெங்களூரு:

யத்னால் எம்.எல்.ஏ.

பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் யத்னால். இவர், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரி முருகேஷ் நிரானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குறிப்பாக பஞ்சமசாலி சமுதாயத்திற்கு 2ஏ இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையையும் கடுமையாக தாக்கி பேசி இருந்தார். யத்னால் எம்.எல்.ஏ. தொடர்ந்து பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக பேசி வருவதை, எதிர்க்கட்சிகளான காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது.

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் யத்னால் எம்.எல்.ஏ.வால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், பா.ஜனதா தலைவர்களும் இக்கட்டில் சிக்கி உள்ளனர். யத்னால் எம்.எல்.ஏ. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து பெங்களூருவில் மாநில தலைவர் நளின்குமார் கட்டீலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

ஒழுங்கு குழு நடவடிக்கை

பா.ஜனதா மூத்த தலைவர்களில் யத்னால் எம்.எல்.ஏ.வும் ஒருவர் ஆவார். அவர் கட்சி தலைவர்கள் பற்றியும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறித்தும் கருத்து கூறுவது சரியானது இல்லை. பா.ஜனதா கட்சி ஒழுக்கமானது. இங்கு ஒழுக்கம் மிக முக்கியமானதாகும். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் யத்னால் எம்.எல்.ஏ. மீது பா.ஜனதாவின் ஒழுங்கு குழு நடவடிக்கை எடுக்கும்.

யத்னால் எம்.எல்.ஏ.வை டெல்லிக்கு வரும்படி ஒழுங்கு குழு அழைப்பு விடுத்துள்ளது.

ஒழுங்கு குழுவின் முன்பாக யத்னால் அளிக்கும் விளக்கத்தின் பேரில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் கூற இயலாது. அவர் அளிக்கும் விளக்கத்தின்படி ஒழுங்கு குழுவே உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்