பா.ஜனதா-காங்கிரஸ் இடையே 'குஸ்தி'
கர்நாடகத்தில் பெரிய மாவட்டங்களில் ஒன்று பெலகாவி. வடகர்நாடக மாவட்டத்தின் தலைமையமான பெலகாவி, கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்தப்படியாக அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கரும்பு உற்பத்தியில் மண்டியாவை பின்னுக்கு தள்ளி கர்நாடகத்தின் சர்க்கரை கிண்ணம் என்ற பெயரை பெலகாவி பெற்றுள்ளது.
பெலகாவி
மராட்டிய எல்லையில் உள்ள பெலகாவியை அந்த மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. பெலகாவி தங்களுக்கு சொந்தமானது என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் அங்கு கர்நாடக அரசின் அதிகார மையமான சுவர்ண சுவதா கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பெலகாவியில் 68 சதவீதம் கன்னடம் பேசும் மக்களும், 18 சதவீதம் மராட்டியம் பேசும் மக்களும், 9 சதவீதம் உருது பேசும் மக்களும் வசிக்கிறார்கள். கர்நாடகத்தில் அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட மாவட்டம் பெலகாவி தான். பெலகாவியில் நிப்பானி, சிக்கோடி, அதானி, காக்வாட், குடச்சி, ராயபாக், ஹூக்கேரி, அரபாவி, கோகாக், எமகனமரடி, பெலகாவி வடக்கு, பெலகாவி தெற்கு, பெலகாவி புறநகர், கானாப்புரா, கித்தூர், பைலஹொங்கல், சவதத்தி எல்லம்மா, ராமதுர்கா ஆகிய 18 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பெலகாவி மாவட்டத்தில் 10 தொகுதிகளில் பா.ஜனதாவும், 8 தொகுதிகளில் காங்கிரசும் ெவற்றி பெற்றுள்ளன. பெலகாவி மாவட்டத்தை பொறுத்தவரை பா.ஜனாதாவும், காங்கிரஸ் கட்சியும் தான் சமபலத்துடன் உள்ளது. இதனால், இரு தேசிய கட்சிகளும் பெலகாவியில் வெற்றி கொடியை நாட்ட குஸ்தி போடுகின்றன.
நிப்பானி-சிக்கோடி
நிப்பானி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சசிகலா ஜோலே. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் அறநிலைய துறை மந்திரியாக இருக்கும் இவரே மீண்டும் நிப்பானி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் காகசாகேப் பட்டீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் ராஜூ மாருதி பவார் வேட்பாளராக களம் காண்கிறார்.
சிக்கோடி தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கணேஷ் ஹுக்கேரி. இவரே மீண்டும் காங்கிரஸ் சார்பில் சிக்கோடி தொகுதியில் களம் காண்கிறார். பா.ஜனதா சார்பில் ரமேஷ் கட்டி போட்டியிடுகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சுகாஸ் சதாசிவ் வால்கே வேட்பாளராக உள்ளார்.
அதானி-காக்வாட்
அதானி தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மகேஷ் குமட்டள்ளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்து இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரமேஷ் ஜார்கிகோளியின் தீவிர ஆதரவாளரான அவருக்கே பா.ஜனதா டிக்கெட் வழங்கி உள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதாவில் டிக்கெட் கேட்டு வந்த முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, அதிருப்தி அடைந்து பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் கட்சி அதானி தொகுதியில் லட்சுமண் சவதிக்கு டிக்கெட் வழங்கி உள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சசிகாந்த் பதசாலகி போட்டியிடுகிறார்.
காக்வாட் தொகுதியில் கடந்த தேர்தலில் ெவற்றி பெற்றவர் ஸ்ரீமந்த் பட்டீல். காங்கிரசை சேர்ந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் பா.ஜனதா சார்பில் அவர் காக்வாட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கடந்த முறை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பரமகவுடா ஆலேகவுட காகே, இந்த முறை காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி மல்லிகார்ஜுன் குஞ்கனவி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
குடச்சி-ராயபாக்-ஹூக்கேரி-அரபாவி
குடச்சி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜீவ். இவருக்கே பா.ஜனதா மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் மகேந்திர தம்மண்ணவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) சார்பில் ஆனந்த் மாலகி போட்டியிடுகிறார்.
ராயபாக் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் துர்யோதன் மகாலிங்கப்பா. பா.ஜனதாவை சேர்ந்த இவரே, இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் மகாவீர் மோகித் போட்டியிடுகிறார். ஜனதாதளம்(எஸ்) சார்பில் காங்கிரசில் இருந்து விலகி ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சேர்ந்த பிரதீப்குமார் மாலகிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹூக்கேரி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உமேஷ் கட்டி. மந்திரியாக இருந்த அவர், கடந்த ஆண்டு (2022) மரணம் அடைந்தார். இதனால் இந்த முறை ஹூக்கேரி தொகுதியில் அவரது மகன் நிகில் கட்டிக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த ஏ.பி.பட்டீலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் பசவராஜ் பட்டீல் போட்டியிடுகிறார்.
அரபாவி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பாலசந்திர ஜார்கிகோளி. இந்த முறையும் இவருக்கே பா.ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் அரவிந்த் தல்வாய் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் பிரகாஷ் கஷெட்டி என்பவர் போட்டியிடுகிறார்.
கோகாக்-எமகனமரடி
கோகாக் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரமேஷ் ஜார்கிகோளி. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய முக்கிய காரணம் இவர் தான். இவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் பாலியல் புகாரில் சிக்கியதால் அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி குற்றமற்றவர் என்று போலீசார் கோர்ட்டில் 'பி' அறிக்கை தாக்கல் செய்தனர். தற்போது அவர் பா.ஜனதா சார்பில் கோகாக் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் மகாந்தேஷ் கடாடியும், ஜனதாதளம்(எஸ்) சார்பில் சந்தன்குமார் என்பவரும் போட்டியிடுகிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்பின்படி கடந்த 2013-ம் ஆண்டு எமகனமரடி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. 2013 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சதீஸ் ஜார்க்கோளி வெற்றி பெற்றார். இந்த முறையும் சதீஸ் ஜார்கிகோளி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் பசவராஜ் ஹந்திரி களம் காண்கிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி மாருதி மல்லப்பா அஸ்டகியை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
பெலகாவி வடக்கு-தெற்கு-புறநகர்
பெலகாவி வடக்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனில் பெனகே. இந்த முறை அவருக்கு பா.ஜனதா கட்சி டிக்கெட் வழங்க மறுத்துள்ளது. இதனால், அவர் பா.ஜனதாவில் இருந்து விலகிவிட்டார். பா.ஜனதா கட்சி பெலகாவி வடக்கு தொகுதியில் ரவி பட்டீல் என்பவருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் ஆசீப் சேட் போட்டியிடுகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சிவானந்த் முகலிகால் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
பெலகாவி தெற்கு தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அபய் பட்டீல். இவரே மீண்டும் பா.ஜனதா சார்பில் பெலகாவி தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் பிரபாவதி என்பவர் களம் காண்கிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சீனிவாஸ் தலுக்கரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
பெலகாவி புறநகர் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் லட்சுமி ஹெப்பால்கரே மீண்டும் அக்கட்சி சார்பில் அங்கு களம் காண்கிறார். பா.ஜனதா கட்சி சார்பில் நாகேஷ் மன்னோல்கரும், ஜனதாதளம்(எஸ்) சார்பில் சங்கரகவுடா ருத்ரகவுடா பட்டீலும் போட்டியிடுகிறார்கள். பெலகாவி வடக்கு, பெலகாவி தெற்கு, பெலகாவி புறநகர் ஆகிய 3 தொகுதிகளும் கடந்த 2008-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டதாகும்.
கானாப்புரா-கித்தூர்-பைலஹொங்கலா
கானாப்புரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அஞ்சலி நிம்பால்கருக்கே இந்த முறையும் காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. பா.ஜனதா கட்சி கடந்த முறை தோல்வி அடைந்த விட்டல் ஹலகேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் நசீர் பகவான் போட்டியிடுகிறார்.
கித்தூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மகாந்தேஷ் தொட்டண்ணகவுடர். இவரே மீண்டும் பா.ஜனதா சார்பில் அங்கு போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் பாபாசாகேப் பட்டீல் களம் காண்கிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி அஸ்வினி சிங்கய்யா என்பவரை நிறுத்தி உள்ளது.
பைலஹொங்கலா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மகாந்தேஷ் கவுஜலகி. இவரே காங்கிரஸ் சார்பில் மீண்டும் களம் காண்கிறார். பா.ஜனதா கட்சி கடந்த முறை தோல்வி அடைந்த ஜெகதீஷ் சன்னப்பாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.
சவதத்தி எல்லம்மா- ராமதுர்கா
சவதத்தி எல்லம்மா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆனந்த் மாமனி. கர்நாடக சட்டசபை துணை சபாநாயகராக இருந்த அவர், சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனால், இந்த முறை அவரது மனைவி ரத்னா மாமனிக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் விஸ்வாஸ் வசந்த் வைத்யாவும், ஜனதாதளம்(எஸ்) சார்பில் சவுரப் ஆனந்த் சோப்ராவும் போட்டியிடுகிறார்கள்.
ராமதுர்கா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மகாதேவப்பா சிவலிங்கப்பா உள்ளார். இந்த முறை பா.ஜனதா சிக்க ரேவண்ணா என்பவருக்கு டிக்கெட் வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் அசோக் பத்தான் என்பவர் போட்டியிடுகிறார்.