சோமவார்பேட்டையில் காட்டு யானை தாக்கி தொழிலாளி சாவு

சோமவார்பேட்டையில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2023-02-06 18:45 GMT

குடகு:

காட்டு யானைகள் அட்டகாசம்

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சாந்தபுரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். மேலும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளிகளான குமார் (வயது 40), தொட்டய்யா ஆகியோர் வனப்பகுதியையொட்டி உள்ள விளைநிலத்தில் நெல் நடவு செய்து கொண்டிருந்தனர்.

தொழிலாளி சாவு

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது காட்டு யானையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குமாரும், தொட்டய்யாவும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனாலும் காட்டு யானை குமாரை பின்தொடர்ந்து விரட்டி சென்று தும்பிக்கையால் தூக்கி வீசியது. மேலும் அவரை காலால் மிதித்தது. தொட்டய்யா தப்பி ஓடிவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், காட்டு யானையை விரட்டியடித்தனர். ஆனாலும் அதற்குள் குமார், பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

கோரிக்கை

மேலும் மடிகேரி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போலீசார், யானை தாக்கி உயிரிழந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, காட்டு யானையின் அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்றும், அந்த காட்டு யானையை வனப்பகுதியில் விரட்டியடிக்க வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் யானை தாக்கி பலியான குமாரின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனை ஏற்று கொண்ட வனத்துறையினர் குமாரின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்