கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
குந்துகோலில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா ஹிரேஹரகுணி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா உமச்சகி (வயது 26). தொழிலாளியான இவர் தினமும் மதுபானம் அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து, குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் சித்தப்பா மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சித்தப்பா வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். இதையடுத்து அவர் இரவு மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில், நள்ளிரவு இவர் அந்த பகுதியில் இருந்த கிணற்றின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் இல்லை என்று கூறப்படுகிறது.
இதில் நிலை தடுமாறிய சித்தப்பா, கிணற்றிக்குள் தவறி விழுந்தார். இந்நிலையில் மதுபோதையில் இருந்த அவரால் வெளியே வர முடியவில்லை. நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் குந்துகோல் புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் சித்தப்பாவி்ன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து குந்துகோல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.